×

ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தொலை தொடர்பு சேவை வழங்க நகரும் செல்போன் டவர்: ட்ராய் அதிகாரி தகவல்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தொலை தொடர்பு சேவை வழங்க நகரும் செல்போன் டவர் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர் மற்றும் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. குறிப்பாக ஒரு ஆண்டு முழுவதும் காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை மட்டுமே பெய்யும் நிலையில், ஒரே நாளில் 93 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாநகரில் வழக்கமான மழையின்போது பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலையில், ஆனால் அண்மையில் பெய்த கனமழையால் மாநகர பகுதி முழுவதும் தீவாக மாறி உள்ளது.

வீடுகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு படகு மூலமாகவும், ஹெலிகாப்டர் மூலமாகவும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தாமிரபரணி ஆற்றில் வந்த வெள்ளத்தின் காரணமாக தீவுபோல் மாறியது. மேலும் கொட்டித்தீர்த்த கனமழை, வெள்ளம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் நகரும் செல்போன் டவர் அமைக்கப்படும் என்று ட்ராய் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவைகுண்டம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2.5 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல். தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொலை தொடர்பு சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது. ஒரு நகரும் செல்போன் டவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல் தெரிவித்திருக்கிறது.

The post ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தொலை தொடர்பு சேவை வழங்க நகரும் செல்போன் டவர்: ட்ராய் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Srivaikundam ,TRAI ,Thoothukudi ,Thoothukudi district ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மத்திய பாகம் காவல்...